இதழ் ஆசிரியர்

முற்றம் இதழின் ஆசிரியர். விசவனூர். வே. தளபதி அவர்கள். இவர் வணிகவியல் படித்தவராயினும், தமிழின் பால் தீராத பற்றுக் கொண்டவர். அதற்கு காரணம் அவரின் தந்தையார் பி. வேலன் அவர்கள். இவர் தமிழகத்திலிருந்து சிறு வயதில் பர்மா நாட்டிற்குச் சென்றவர். அந்த நாட்டில் திராவிடக் கருத்துக்களை விதைத்த சீர்திருத்த உழவர். திராவிட கழகத்தின் முக்கிய மனிதராக வாழ்ந்தவர். இந்திய சுதந்திரத்திற்குப்பின் தமிழகம் வந்த இவர், சென்னையில் உறவுகளும், கட்சி தோழர்களும் இங்கேயே இருங்கள் என்று கேட்டுக் கொண்டதை ஏற்க மறுத்து, தான் பிறந்த மண்ணுக்கு வந்து, தனது ஊரைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்கத்துக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், தனது பொருளாதாரம் அனைத்தையும் இழந்தவர். மிசாவில் ஆறு மாத காலம் சிறை சென்றவர். முன்னாள் அமைச்சர் திரு. தங்கபாண்டியன் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அவரின் உற்ற தோழராகத் திகழ்ந்தார். தினம்தோறும் படித்துக்கொண்டே இருந்தவர். இவரைப்போலவே இவரது துணைவியாரும், மகன்களும் படிப்பதில் பேரார்வம் கொண்டவர்கள். அந்த ஆர்வம் தான் வே. தளபதி அவர்களை இதழ் நடத்தும் அளவிற்கு வழி நடத்தியிருக்கிறது.

விசவனூர் வே. தளபதி அவர்கள் 2009 ஆம் ஆண்டு இளையான்குடி இடைதேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிட்டார். பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் பொறுப்பாளராக இருந்து வருகிறார். மருத்துவர் இராமதாஸ் அவர்களுடைய கனல் மாத இதழின் ஆசிரியர் திரு ஜெ. குரு அவர்களோடு ஆசிரியர் குழுவில் ஒருவராக பத்தாண்டுகளுக்கு மேல் பணி செய்து வருகிறார். 2010 முதல் கோனார் என்ற சமுதாய இதழையும் நடத்தி வருகிறார். பாடல்கள் பல எழுதியிருக்கிறார். பன்முக இசையமைப்பாளர்கள் பாடலாசிரியர்கள் சங்கத்தின் துணைச்செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். மேழி என்ற பெயரில் ஒலிப்பதிவுக்கூடம் நடத்தி வருகிறார். சிலம்பக்கலையைப் பற்றிய ஒரு பாடல் தொகுப்புக்கு இசை அமைத்தும் இருக்கிறார். " மனிதமே முதன்மை" என்ற தனது எண்ணத்தை முற்றம் இதழின் முகப்பில் பதித்திருக்கிறார்.